கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு இடங்களில் கலைநயமிக்க சிலைகளை நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில், இந்தியாவிலேயே முதன் முறையாக அசோகச் சக்கரம் சிங்கம் தலை கொண்ட
கம்பீரமான சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை பறைசாற்றும் இந்தச் சிலை திறப்பு விழாவில், நமது பாரம்பரிய கலைகளின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் பரதநாட்டியம், கதக்களி மற்றும் புனித சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்ததுடன், தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது. கோவை மாநகரின் அடையாளமாக உயர்ந்து நிற்கும் இந்த அசோகச் சக்கர சிங்கம் சிலை, நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதுடன், பொதுமக்களிடையே தேசியப் பற்றையும் பெருமிதத்தையும் வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சிலை திறப்பு விழாவில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.