தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024-ம் ஆண்டு 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதன்படி, 3.16 சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படும்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின்கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனினும், மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டு இருப்பதால், 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்’’ என்றனர்.