தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி தினேஷ், விஷ்வா ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேண்டாக்கோட்டை பகுதியில் இரண்டு இரு சக்கர வகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சாமுவேல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் பின்னால் அமர்ந்து இருந்த நிஷாந்த் கை உடைந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பின்னால் அமர்ந்த விஷ்வா சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காயம்பட்டவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.