விழுப்புரம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இன்று பாமக செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, உள்பட பலர் பங்கேற்றனர். ராமதாசின் மூத்த மகள் காந்திமதியும் இந்த
கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சிக்கு கட்டுப்படாமல், கட்சியை பலவீனப்படுத்துகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட சில தீர்மானங்களில் அன்புமணி செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ராமதாஸ் அனுமதி இன்றி, ஜி.கே. மணி, அருள் போன்றவர்களை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: எனது வலியை அறிந்தவர்கள் இந்த கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். கூட்டணி அமைத்து தான் 2026 சட்டமன்ற தேர்தலை, பாமக தேர்தலை சந்திக்கும். அதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி, அதிகாரத்தில் பங்குபெறும் வகையில் கூட்டணி இருக்கும்.
பாமக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி விட்டது. போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு கொடுக்கலாம். வேட்பாளர்களுக்கான ஏ.பி படிவத்தில் நான் தான் கையெழுத்திடுவேன். பாமகவினர் 93 சதவீதத்தினர் என்னுடன் உள்ளனர். எனக்கு ஏற்பட்ட வலியை விட ஜி.கே மணிக்கு ஏற்பட்ட வலி கொஞ்சம் நஞ்சமல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.