Skip to content

அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்

அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏர்இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த நிலையில், அதிலிருந்தவர்களும் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 260-ஆக அதிகரித்தது. இது உலகம் முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின் படி, விசாரணை செய்யும் நாடு, விமான விபத்து நடந்த 30 நாட்களுக்குள் ஏதேனும் கண்டுபிடிப்புகளுடன் ஆரம்ப அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்து சரியாக ஒருமாதம் ஆகும் நிலையில், விமான விபத்து புலனாய்வுப் பிரிவு முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, விமானிகள் அறையில் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் CUTOFF நிலைக்கு நகர்ந்ததைக் கண்டறிந்துள்ளது. CUTOFF என்றால் எரிபொருள் நிறுத்தம் என அர்த்தம்.
விமானம் புறப்பட்ட சில நொடிகளில், இரண்டு என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆனது என்பதை விமானிகள் பேசிய குரல் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 எரிபொருள் CUTOFF சுவிட்சுகள் 1 விநாடி நேர இடைவெளியுடன் RUN இலிருந்து CUTOFF நிலைக்கு ஒன்றன் பின் ஒன்றாக மாறின. என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், விமான நிலைய சுற்றுச்சுவரைக் கடப்பதற்கு முன்பு விமானம் உயரே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்துள்ளார். 2 என்ஜின்களும் செயலிழந்ததால் RAT எனப்படும் அவசரகால மின் உற்பத்தி அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்ததுள்ளது.
விமானிகளின் முயற்சியில் எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கினாலும், ஒரு என்ஜின் மட்டுமே இயங்க தொடங்கியது. மற்றொரு என்ஜின் செயல்படாமல் இருந்ததால், வேகமும் உயரமும் விமானம் மேலே எழும்புவதைத் தடுத்துள்ளது.
விமானம் வேகமாக தரையிறங்குவதை உணர்ந்து விமானிகளில் ஒருவர் MAYDAY எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து, அதுகுறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் பதில் அளிப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளாகியது.
எரிபொருள் சுவிட்ச் எப்படி CUTOFF நிலைக்கு புரண்டிருக்க முடியும் என்பதை முதற்கட்ட கண்டுபிடிப்புகள் கூறவில்லை. கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்று அறிக்கை கூறுகிறது. விசாரணை தொடரும் என்றும் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
விபத்திற்குப் பிறகு விமானத்தின் இரண்டு என்ஜின்களும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளதாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் ஆய்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவையும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்படும் பவுசர்கள் மற்றும் டாங்கிகளில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் DGCA ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு திருப்திகரமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த பயணியின் வாக்குமூலம் புலனாய்வாளர்களால் பெறப்பட்டுள்ளது. விமானக் குழுவினர் மற்றும் பயணிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், விமானத்தை உருவாக்கிய போயிங் நிறுவனம் மற்றும் என்ஜினை தயாரித்த ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மீது எந்த நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விசாரணைக்கு தொடர்ந்து முழுமையாக ஒத்துழைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணையின் தீவிரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட விவரங்கள் குறித்து தங்களால் கருத்து தெரிவிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல், விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியாவுடன் தொடர்பில் உள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
error: Content is protected !!