தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர், தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை. இந்த அணையின் மூலம் பல லட்சம் விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தாலும், இதன் நீர் ஆதாரங்கள், கர்நாடகத்தை நம்பியே உள்ளது.
கர்நாடகத்தில் உள்ள குடகு மலை பகுதியில் உற்பத்தியாகும் காவிரி நீர், அங்குள்ள கே. ஆர்.எஸ். அணை நிரம்பியதும் உபரி நீர் தமிழ்நாட்டுக்கு வருகிறது. அத்துடன் கர்நாடகத்தில் உள்ள கபினி அணையின் உபரி நீரும் மேட்டூர் அணைக்கு தான் வரும். கபினி அணையின் நீர் ஆதாரம் கேரள மாநிலம் வயநாடு பகுதிகள் ஆகும்.
தென் மேற்கு பருவமழை காலத்தில் நிரம்பும் கர்நாடக அணைகளில் இருந்து வரும் உபரி நீர் காரணமாக மேட்டூர் அணை நீர் ஆதாரத்தை பெறுகிறது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் கர்நாடகத்தில் இருந்து வரும் வெள்ளத்தால், தமிழ்நாட்டில் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வந்தது. இந்த சேதம் வருடந்தோறும் நீடித்தது. இந்த சேதங்களை தடுக்க வேண்டுமானால் ஒரு அணை கட்டப்பட வேண்டும் என அப்போதைய ஆங்கிலேயே அரசு முடிவெடுத்தது.
இதற்காக 1834ம் ஆண்டு முதல் 1924ம் ஆண்டு வரை 90 ஆண்டுகள் ஆய்வுகள் நடந்தன. இந்த அணை கட்டுமான பணிக்கு மைசூர் சமஸ்தானம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுவும் காலதாமதத்திற்கு காரணம். ஆங்கிலேய அரசின் கண்காணிப்பு வடிவமைப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ், நிர்வாகப் பொறியாளர் வெங்கட்ராமன் ஐயர், முதன்மை தலைமைப் பொறியாளர் முல்லிங்கி அடங்கிய 24 பொறியாளர்கள் குழுவினருடன் பணிகள் தொடங்கியது. இதில் பல்லாயிரகணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதற்காகவே அங்கு ஒரு நகரம் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு பெயர் சேலம் கேம்ப். அதாவது அன்றைய தினம் மேட்டூர் அத்தனை பிரசித்தி பெற்ற நகரமாக இருக்கவில்லை. எனவே சேலத்தை கொண்டே அந்த பெயர் சூட்டப்பட்டது. இந்த சேலம் கேம்ப் இன்னும் உள்ளது. மேட்டூர் அணை அருகில் உள்ள பகுதி சேலம் கேம்ப் என்றே அழைக்கப்படுகிறது. அணை கட்டுவதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை வெளியேற்றினர். அவர்கள் அணையை சுற்றி உள்ள பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். குறிப்பாக சாம்பள்ளி என்ற கிராம மக்கள் மறு குடியமர்வு செய்யப்பட்ட பகுதி இப்போது புதுசாம்பள்ளி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அணைக்கான தேவையான மூலப்பொருட்கள் கொண்டு வருவதற்காகவே மேட்டூருக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதற்கு முன் மேட்டூருக்கு மண் சாலை வசதி தான் இருந்தது. பின்னர் தார்சாலை அமைக்கப்பட்டது.
1925ல் அணை கட்டுமான பணி தொடங்கியது. அணைக்கு 2,16,000 டன் சிமென்ட் பயன்படுத்தப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அணைக்கான பணிகள் தாமதம் இன்றி நடக்கவும், எந்த உத்தரவுக்காகவும் சேலத்தை எதிர்பார்த்து காத்திருக்க கூடாது என்பதற்காகவும், அணை கட்டும் முன் மேட்டூர் தாலுகாவை மேட்டூர் மாவட்டமாக தகுதி உயர்த்தினர். அணை கட்டும் வரை மேட்டூர் தனி மாவட்ட அந்தஸ்து பெற்றிருந்தது. சுமார் 9 ஆண்டுகள் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கடந்த 1934ம் ஆண்டு ஜூலை 14 ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதற்கு 4.80 கோடி ரூபாய் செலவானது. இதைத் தொடர்ந்து, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் சென்னை மாநில கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி, அணையை முதன் முறையாக திறந்து வைத்தார். அவரது நினைவாக அணைக்கு ஸ்டேன்லி அணை என பெயர் சூட்டப்பட்டது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயேர் கட்டிய இந்த அணை தான் அப்போது தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணையாக கருதப்பட்டது. தற்போதும் மேட்டூர் அணை தான் தமிழ்நாட்டின் பெரிய அணை. இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 20 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. பல லட்சம்பேர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். இன்று 91 வயதை நிறைவு செய்துள்ள மேட்டூர் அணை தமிழ்நாட்டின் வளத்திற்கு பொக்கிஷமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணை இதுவரை 5 முறை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இன்றும் அணையின் நீர்மட்டம் 120 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 56,997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.