வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்… என்கிறோமே அந்த பெருமைக்கு காரணம் சென்னை மாநகரம் தான். நம்பிக்கோடு, முயற்சியோடு வந்தவர்களை சென்னை நகரம்… ‘போடா வெண்ணெய் என ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை. கட்டப்பிடிச்சுக்கோடா என்னை’ என அரவணைத்துக்கொள்ளும். தன்னோடு அவர்களையும் வளர்த்து விடும். எனவே தான் தமிழ்நாட்டின் தலைநகராகமாக இருந்தபோதிலும், இந்தியாவின் அனைத்து மொழி பேசுபவர்களும் ஒரு தாய் பிள்ளைகளாக இங்கு பெருமளவில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருசேர கூறுவது மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று தான்.
இந்தி பேசும் மக்கள், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி என அனைத்து மொழி பேசும் மக்களும் இங்கு வசிக்கிறார்கள். சென்னை ஒரு பாரத விலாஸ் ஆக திகழ்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 25% மக்கள் சென்னை மாவட்டத்தில் தான் வசிக்கிறார்கள்.
தொழில், மருத்துவம், கல்வி, திரைப்படம் , வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் சென்னை மாநகரம் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. பெருமைமிகு சென்னை இன்று (ஆகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என்று காலவோட்டத்தில் பெயர்கள் மாறினாலும், இன்றைக்கு சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவின் 4-வது பெரிய நகரம், உலகின் 31-வது பெரிய நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு
1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. சென்னப்ப நாயக்கர் என்பவரின் மகன் வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியை தொடங்குவதற்காக பிரான்சிஸ்டே என்பவர் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலத்தை எழுதி வாங்கினார். வெங்கடப்ப நாயக்கரின் ஆசைப்படி, தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, மதராஸ் பட்டணம் என்ற பெயர் சென்னப் பட்டணமாக மாற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. நாமும் சென்னைக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது
எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!… சென்னை வெறும் ஊரல்ல; தமிழ் நாட்டின் இதயதுடிப்பு .வணக்கம் , வாழவைக்கும் சென்னை .
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.