கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் பற்றி அவதுாறு பரப்பும் நோக்கத்துடன் ஒரு மாதத்துக்கும் மேலாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. கோவிலில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் இத்தகைய புகார்களை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். கோவில் அருகில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்கள் உடல்களை தாமே புதைத்ததாக, அவர் கூறினார். போலீசிலும் புகார் அளித்தார். முகமூடி அணிந்து கொண்டு அவர் அளித்த வீடியோ பேட்டி வெளியான நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநில அரசு எஸ்.ஐ.டி., என்ற தனிப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது. தொடர் விசாரணையில், அப்படி கொலை, கற்பழித்து எதுவும் நடந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள், அரசியல் கட்சியினர், மாநில அரசு என அனைத்து தரப்பினருமே, அப்படி கொலை, கற்பழிப்பு நடக்க வாய்ப்பில்லை; இது பொய்யான புகார் என்று அடித்துக்கூறினர். இத்தகைய சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23), பொய்ப்புகார் அளித்து பரபரப்பை கிளப்பிய முகமூடி அணிந்த நபரை போலீசார் கைது செய்தனர். யாருடைய துாண்டுதலில் அவர் இவ்வாறு புகார் அளித்தார் என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது
- by Authour
