Skip to content

விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது.

அதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு அதிகாரிகள் தங்கள் கடமையில் தளர்வு காட்டியுள்ளனர் என நீதிமன்றம் முன்பு அதிருப்தி தெரிவித்தது. விதிமீறல்கள் தெளிவாக இருந்த போதும், நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களின் தவறுகளுக்கான நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். இனி விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவுகளை முறையாக செயல்படுத்துவோம் என உறுதியளித்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியும் அதிகாரிகள் செயலற்றும் இருந்துள்ளனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கெனவே ஒரு முறை மாநகராட்சி ஆணையர் இந்த வழக்கு தொடர்பாக மன்னிப்பு கேட்டிருந்தார்.

சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராயபுரத்தில் உள்ள கட்டிட விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. அது போல் பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்கறிஞர் ருக்மாங்கதன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அமர்வு முன்பு கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை ஆணையரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  இதையடுத்து இந்த விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நேரில் ஆஜரானார். அப்போது அவர் நீதிமன்ற உத்தரவுகளை நான் வேண்டுமென்றே மீறவில்லை. நடந்த தவறுக்கு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என குமரகுருபரன் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், குமரகுருபரனுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

error: Content is protected !!