அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் திறன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எந்த மாநிலமும் சிந்திக்காத வகையில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வயிற்றுப் பசியை போக்கிவிட்டோம். அறிவு பசியை போக்கவே எண்ணும், எழுத்தும் திட்டத்தை கொண்டு நம்முடைய ஆசிரியர்கள் மூலம் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடல் பாடி, கதை சொல்லி மற்றும் நடனத்தின் மூலம் மாணவர்களுக்கான ஆர்வமுள்ள கல்வியை பெற்று இருக்கிறோம்.
இடைநிற்றலுக்கான காரணமே மாணவர்களுக்கு கற்றல் மீது ஆர்வமின்மை மற்றும் மகிழ்ச்சி இன்மை என்பதால்தான். அதை தீர்க்கவே தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வை கொண்டு வந்துள்ளோம். மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு கற்றல் மீது ஆர்வத்தை தூண்ட முடியும். தற்போது இவை அனைத்தையும்
பள்ளிகளில் கொண்டு வந்துள்ளோம். ஸ்மார்ட் வகுப்பறைகளை 22931 பள்ளிகளில் கொண்டு வந்துள்ளோம். இணைய வசதியே இல்லாத பள்ளிகளில் பென்டிரைவ் மூலம் கற்பித்தல் செய்கிறோம். இனி நமக்கு தேவை நல்ல விளைவு மட்டுமே. பள்ளிகளில் நாம் சொல்லித் தருவது மாணவர்களுக்கு புரிகின்றதா? அல்லது புரியவில்லையா? என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காகவே இந்த அடைவுத்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று சொல்கிறோம். ஆகினும் மாணவர்கள் கற்றலை அறிவுபூர்வமாக உணர்ந்து படிக்கின்றனரா? படிப்புக்கான தரத்தை நான் கொடுக்கின்றோமா? என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் முதலிடம் பெறும்போது, வேறொரு மாவட்டம் கடைசி இடத்தைதான் பிடிக்கும். முதலிடம் பிடிக்கும் மாவட்டத்தில் மாணவர்கள் புரிந்து கல்வியை பயில்கின்றனரா? என்பதையும் இந்த அடைவு திறன் தேர்வு மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.