Skip to content

திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தனது முதல் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13, 2025) தொடங்கினார். மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பகல் 3:00 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய், 19 நிமிடங்களில், 3:19 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.

திரளாக கூடிய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே, திமுக அரசின் 505 தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு, “சொன்னீர்களே, செய்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அது மட்டுமின்றி, விஜய், திமுகவின் முக்கிய வாக்குறுதிகளான டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், மற்றும் 2 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவது ஆகியவை நிறைவேற்றப்படவில்லை என்று விமர்சித்தார்.

மேலும், “நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால், திமுகவிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை,” என்று அவர் கூறினார். மேலும், “திமுகவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளது. இலவச பேருந்து பயணம் என்று பெண்களை ‘ஓசி’ என்று அசிங்கப்படுத்துகிறார்கள். மகளிருக்கு ரூ.1,000 கொடுத்து, அதையும் விளம்பரப்படுத்தி பெண்களை இழிவுபடுத்துகிறார்கள்,” என்று குற்றம்சாட்டினார்.

திருச்சியின் உள்ளூர் பிரச்சனைகளை எடுத்துரைத்த விஜய், “இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி முன்னேற்றம் அடையவில்லை. காவிரி நீர் பாயும் பகுதிகளில் கூட குடிநீர் பிரச்சனை நீடிக்கிறது. மணல் கொள்ளையில் ஈடுபடுவதைத் தவிர, குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழி காணவில்லை,” என்று திமுக அரசை விமர்சித்தார்.  அதனைத்தொடர்ந்து, தவெக ஆட்சிக்கு வந்தால், “கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட விவகாரங்களில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டுமே உறுதியளிப்போம்,” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

உரையின் முடிவில், “நடைமுறைக்கு எது சாத்தியமோ, அதை மட்டுமே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம்,” என்று கூறி, தொண்டர்கள் அளித்த மாலைகளை அணிந்து, ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி காவல்துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது, மேலும் பெரம்பலூரில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!