சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார். அன்புக் கரங்கள் திட்டம், பெற்றோர்களை (இருவரையும் அல்லது ஒருவரையும்) இழந்து, பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகளுக்கு 18 வயது வரை பள்ளிக் கல்வியைத் தொடர உதவும் வகையில், மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்குகிறது.
இது தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்” திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டம், வறுமையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், ”குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணாவுக்கு நாங்கள் செய்யும் மரியாதை, மக்களின் குரலாக திமுக எதிரொலித்து வருகிறது. கடைகோடி மக்களின் தேவையையும் பூர்த்தி செய்கிறோம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அரசியலுக்காக முன்னெடுத்த திட்டம் அல்ல. அரசியல் என்றால், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள், எங்களுக்கு எப்போதும் பொறுப்பு தான் முக்கியம். அன்புக் கரங்கள் திட்டம் மூலம் 6,082 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், நீங்கள் படித்து முடித்து சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.