மாணவி பிரேமாவின் உருக்கமான பேச்சைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியில், ஒழுகும் வீட்டில் வசிக்கும் தனது தந்தையின் நிலை குறித்து பிரேமா கண்ணீர் மல்க பேசியது, முதல்வரை உருக்கியது.
நிகழ்ச்சியில் பிரேமா உருக்கமாகக் கூறியதாவது “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை எனக்கு எப்போதுமே உண்டு. கடினமாக உழைத்து ஒட்டு வீடு கட்டினோம் இருந்தாலும் ஒழுகும் எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி, என்னைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ” தனது தந்தையின் தியாகத்தாலும், உறுதியான ஆதரவாலும் கல்வி கற்று, வேலை பெற்று, முதல் சம்பளத்தை அவரிடம் அளித்த தருணத்தை அவர் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசிய காணொளியை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்! உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” என கூறியுள்ளார். இதனையடுத்து, முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், பிரேமா அவர்களின் குடும்பத்துக்குக் ‘கலைஞர் கனவு இல்ல’ ஆணையைத் தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வழங்கினார்.