Skip to content

தீபாவளி வசூல்… அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு…

தீபாவளியை ஒட்டி தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்பட சுமார் 20 துறைகளில், ஒவ்வொரு ஆண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்து, லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டும் அரசு துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டையைத் தடுப்பதற்காக, லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக செயல்படும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் சிறப்பு தனிப்படையினர், அரசுத் துறை சார்ந்த அதிகாரிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல்களை திரட்டி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் திடீர் சோதனைகளில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் 38 தனிப்படைகள் இதற்காக களமிறங்கியுள்ளன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:“தீபாவளியை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசுத் துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்பு ஒரு கோடியைத் தாண்டிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது,” என்றார். இதன் காரணமாக, அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!