தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி ( 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனது. ஒன்றரை வயதில் கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சிவக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் இனி தன்னால் கைக்குழந்தையை வைத்து எப்படி வாழ முடியும் என்று விரக்தியில் ராஜராஜேஸ்வரி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மேற்கூறையின் இரும்பு குழாயில் தூக்குப்போட்டு ராஜராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
கைக்குழந்தையை தனியாக தவிக்கவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

