தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகில் மியான்மரில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மலேசிய கடல்சார் அமைப்பு தெரிவித்ததாவது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட அந்தப் படகு லாங்காவி தீவு அருகே மூழ்கியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 170 சதுர கடல் மைல்கள் பரப்பளவில் வான்வழி மற்றும் கடல்வழி தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
”நாங்கள் தாய்லாந்து அமைப்புடன் மிகவும் நல்ல உறவை கொண்டுள்ளோம், அதனால் நல்ல தொடர்பும் தகவல் பரிமாற்றமும் நடைபெறுகிறது,” என்று மலேசியாவின் கெதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களுக்கான கடல்சார் பாதுகாப்பு அமைப்பை தலைமை தாங்கும் ரொம்லி முஸ்தபா கூறினார். தேடுதல் நடவடிக்கை ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இதுவரை மீட்கப்பட்ட 13 பேரில் 11 ரோஹிங்கியாக்களும், 2 பங்களாதேஷ் நாட்டு மக்களும் அடங்குவர். விசாரணையில், அந்தப் படகு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புதிதாங் என்ற இடத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. தேடுதல் நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் பலரை கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று ரொம்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.

