ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் கரட்டூரில் கார் மெக்கானிக் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுககு குரு அஸ்வின் (16), குரு தர்ஷன் (16) என 2 மகன்கள். இரட்டையர்களான இவர்கள் இருவரும் கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பள்ளியில் 2-ம் பருவ இடைத்தேர்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஞானசேகரனும், சுதாவும் கார் மெக்கானிக் பட்டறைக்கு சென்று விட்டனர். அதேபோல் காலையில் பள்ளிக்கு சென்ற குரு தர்ஷன் தேர்வை முடித்துவிட்டு மாலையில் மெக்கானிக் பட்டறைக்கு சென்று விட்டார். குரு அஸ்வின் மட்டும் வீட்டுக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து ஞானசேகரன் குரு அஸ்வினை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அருகே உள்ள வேல்முருகன் என்பவரை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு சென்று குரு அஸ்வினிடம் பேசுவதற்கு செல்போனை கொடுக்குமாறு கூறி உள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு குரு அஸ்வின் மின்விசிறி மாட்டும் கம்பியில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ஞானசேகரன் உடனே வீட்டுக்கு சென்றார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குரு அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற பயத்தில் குரு அஸ்வின் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

