அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் அதிமுக பொதுக்குழுவில் அதிமுக எவரும் குறை சொல்ல முடியாத சிறப்பான ஆட்சியை நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால் மக்கள் அதிமுகவுக்கு, மீண்டும் அங்கீகாரம் கொடுத்திருப்பர். மக்கள் தூக்கி எறிந்த ஆட்சி தான் அதிமுக ஆட்சி.
நாட்டில் என்ன நடக்குது என தெரியாமலேயே முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்தியாவையே குலுங்க செய்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை, தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றவர் எடப்பாடி பழனிச்சாமி.
அதனால்தான் அவரது ஆட்சி மக்கள் விரோதாட்சியாக இருந்ததால், திமுக ஆட்சியை மக்கள் அமைத்தனர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாக்குத் திருட்டு இருந்தது என அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு…
தற்போது நடைபெறுகின்ற தேர்தலில் வாக்கு திருட்டு இருக்கின்றது என்பதை ,காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி ஆதரப்பூர்வமாக எடுத்து வைத்து வருகிறார். அதற்கு அமித்ஷா சொல்கின்ற பதிலை அவரது கட்சியை சேர்ந்த வேறு எவராவது முன்பே சொல்லி இருக்க வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் இல்லை. யாரும் சொல்லாததை தற்பொழுது திசை திருப்புகின்ற பணியாக அமித்ஷா சொல்வது ஏன்? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி மாநில கூட்டத்தில் திமுக குறித்து நடிகர் விஜய் விமர்சனம் செய்த கேள்விக்கு…
தமிழக மக்கள் இதற்கு, தேர்தலில் உரிய பதில் சொல்வார்கள் என பதில்.
அண்மைக்காலமாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழ்நாடு விசயங்களில் கருத்து சொல்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு…
பாஜகவுக்கு எவரையாவது ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், பிடித்து வந்து அவர்களை வைத்து அரசியல் நடத்துவது வழக்கம். ஏற்கனவே அண்ணாமலையை அழைத்து வந்ததை பார்த்தோம். அதேபோன்று ஆந்திர துணை முதல்வரை இங்கு கொண்டு வரப் போகின்றனரோ? என தெரியவில்லை.
அவருக்கு தமிழ்நாட்டின் களநிலவரம் புரியாது. இன்னும் சொல்லப்போனால் ஆந்திராவிலேயே பாஜகவுக்கான தளம் கிடையாது. தற்போது தான் அங்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனவே பவன் கல்யாண் மூலமாக, இங்கு ஏதாவது செய்யலாம் என பாஜக நினைத்தால் அது நடக்காது தமிழ்நாடு மண் அதற்கு இடம் கொடுக்காது.
வரும் தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்கும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு…
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கும் என செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

