காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதே சமயம், காசாவில் ஆயிரக்கணக்கான மக்கள் உணவு. இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு நடுவே. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 20 அம்ச திட்டத்தை ஏற்று, இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பினர் காசாவில் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. பின்னர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நடந்த அமைதி மாநாட்டில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த சூழலில், போரால் பாதிக்கப்பட்ட காசாவில் சக்திவாய்ந்த குளிர்கால புயல் ஏற்பட்டது. இதனால் வீடுகள் இடிந்து விழுந்தன. இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பாதிப்புகளால் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான கூடாரங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

