திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரை குப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை, சிறை வார்டன் கவியரசன் பணியில் இருந்தபோது, கைதி ராஜ்குமார் பிளாக் எண் 10-க்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வார்டன் கவியரசன், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைக் கருதி ராஜ்குமாரை உள்ளே சென்று சாப்பிடுமாறு கூறியுள்ளார்.
வார்டன் மீது தாக்குதல்: இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார், வார்டனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வார்டன் கவியரசனின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவரை கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், சிறை அதிகாரியை தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மோதல் குறித்து சிறை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருச்சி கே.கே. நகர் போலீசார் ஆயுள் தண்டனை கைதி ராஜ்குமார் மீது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

