கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தை, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கரூர் மற்றும் டெல்லியில் வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது.
முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், சம்பவத்தின் தீவிரத்தைக் கருதி அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, இன்று காலை பனையூர் இல்லத்திலிருந்து டெல்லி சென்ற விஜய், காலை 11 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
விசாரணையின் போது, “கூட்ட நெரிசல் குறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே எச்சரிக்கவில்லையா? நிலைமையை எப்போது உணர்ந்தீர்கள்? எப்போது சம்பவ இடத்திலிருந்து வெளியேறினீர்கள்?” என அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், அவரது வாக்குமூலத்தில் ஒப்புதல் கையெழுத்து மட்டும் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணையை ஒத்திவைத்துள்ளது. மீண்டும் ஒரு தேதியில் ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

