சத்தீஸ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர், இன்று ஒரே பேருந்தில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் லெட்கர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். பேருந்து மஹடனிர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அதிவேகமாகச் சென்ற பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மற்றும் காவல் துறையினர், படுகாயமடைந்த 80 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து ஜார்க்கண்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த உறவினர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

