ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மணிகுமார் (35) மற்றும் புஷ்பராஜ் (27) ஆகியோர் சங்கராந்தி விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மணிகுமார் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திலும், புஷ்பராஜ் பெங்களூருவிலும் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் இருவரும், மது அருந்தும் போது யார் அதிக பீர் குடிப்பது என்று விபரீத பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான போட்டியில், இருவரும் சேர்ந்து சுமார் 19 பாட்டில் பீர்களைக் குடித்துள்ளனர். அதிகப்படியான மது உடல்நிலையைப் பாதித்த நிலையில், இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
பண்டிகையைக் கொண்டாட ஊருக்கு வந்த மென்பொறியாளர்கள், மதுப் பந்தயம் என்ற விபரீத விளையாட்டால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

