கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (21) என்ற இளைஞர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. பயின்று வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதில் பல லட்சம் ரூபாயை இழந்ததுடன், அதனை ஈடுகட்ட பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். ரமேஷ் வாங்கிய கடனை அவரது தந்தை ஏற்கனவே இரண்டு முறை அடைத்துள்ளார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ரமேஷ் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ரமேஷை அவரது தந்தை கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரமேஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், மகன் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த ஜமகண்டி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

