கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல்முறையாக ஆஜரான விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதை ஏற்று, விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.
இன்றைய விசாரணையில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பின்னரும் பிரசாரத்தைத் தொடர்ந்தது ஏன், அனுமதிக்கப்பட்டதை விடக் கூடுதல் கூட்டம் வந்தது நிர்வாகிகளுக்குத் தெரியவில்லையா, வாகனத்தில் இருந்தபோது கண் எதிரே நடந்த நெரிசலைக் கவனித்தீர்களா என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இக்கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், தான் தமிழக காவல்துறையை முழுமையாக நம்பியதாகவும், அவர்களின் வழிநடத்தலின் பேரிலேயே செயல்பட்டதாகவும் தெரிவித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், விஜய் இன்று மாலை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ எழுப்பிய பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஓரிரு வரிகளில் பதில் அளித்திருப்பதாகவும், சில நுணுக்கமான கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கூடுதல் அவகாசம் கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த விசாரணை வரும் நாட்களில் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, கரூர் விபத்து குறித்த விசாரணையை விரைவுபடுத்தியுள்ள சிபிஐ, அடுத்த மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. அந்தப் பட்டியலில் கட்சியின் தலைவர் விஜய்யின் பெயரும் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

