சிவகாசி மேற்கு பகுதி ஆசாரி காலனி 5-வது தெருவில் வசிப்பவர் முருகேஸ்வரி ( வயது 44 ). தனியார் மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பாண்டியராஜன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி உயிரிழந்தார். இவர்களது மகள் சோலை ராணி( வயது 19) சிவகாசியிலிருந்து திருப்பிலிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரை சோலை ராணி காதலித்து வந்ததாகவும், இதனை வீட்டிலுள்ளவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் கண்டித்த நிலையில், சோலை ராணி மனம் உடைந்து தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும், மாணவி தற்கொலை செய்து கொண்டதில் உரிய நீதியுடன் இழப்பீடு வழங்கப்பட வேண்டும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கல்லூரி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

