தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் ஆன்லைன் வேலை எனக் கூறி தகவல் வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்ம நபர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி, பல்வேறு டாஸ்க்குகளை நிறைவேற்றினால் பல மடங்கு லாபம் தருவதாகக் கூறி உள்ளார்.
இதையடுத்து அந்த மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு தஞ்சை வாலிபர் பல்வேறு தவணைகளில் ரூ. 20.99 லட்சம் செலுத்தினார்.
மர்ம நபர் கூறியபடி டாஸ்குகளை நிறைவேற்றிய இளைஞருக்கு எந்தத் தொகையும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மர்ம நபரைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

