தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயது பட்டதாரி வாலிபர் ஒருவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் டெலிகிராம் செயலியில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. தொடர்ந்து அதில் இருந்த லிங்கை தொடர்பு கொண்டுள்ளார் அந்த இளைஞர். அப்போது பேசிய மர்மநபர் ஆன்லைனில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த இளைஞர் கடந்த 31.12.2023 முதல் அந்த மர்மநபர் கூறிய வங்கிக்கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ. 6 லட்சத்து 9 ஆயிரம் வரை பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அவருக்கு எவ்விதமான லாபமும் கொடுக்கவில்லை. இதையடுத்து, மர்ம நபரைத் தொடர்பு கொண்டபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அந்த இளைஞர் உணர்ந்தார். இதுகுறித்து அவர் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி முத்தமிழ்செல்வன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸ் தரப்பில் கூறும்போது… பொதுமக்கள் வங்கியிலிருந்து அல்லது வங்கி ஊழியர் பேசுவதாக கூறி தங்களின் வங்கி கணக்கு, ஏ.டி.எம். கார்டு விபரம், ரகசிய எண், ஓ.டி.பி. எண் ஆகியவற்றை கேட்டால் தெரிவிக்க கூடாது.
உங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம் முன்பணம், மாதந்தோறும் பல ஆயிரம் வாடகை தருவோம் என கூறி ஆவணங்கள் மற்றும் பணம் கேட்பார்கள். அப்படி பணம் அனுப்ப வேண்டாம். இதே போல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் பெயரில் போலி பேஸ்புக் வாயிலாக அவசர தேவை பணம் அனுப்பும்படி கேட்டால் பணம் அனுப்ப கூடாது. தனியார் நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள் என்று வரும் குறுஞ்செய்தி, இ-மெயில், ஆன்லைன் வேலை என்று கூறி பணம் மோசடி செய்வார்கள். இதை நம்பி பணத்தை இழந்து விடக்கூடாது என்று தெரிவித்தனர்.