சமூகவலைதளங்களில் இழிவான பதிவு – மன உளைச்சலில் விஷம் குடித்த வாலிபர் – நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் மோகன்ராஜ் (27) என்பவர், தன்னை சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், மோகன்ராஜ் சமூக ஆர்வலர் என்ற பெயரில்

பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி, “அவரை நம்பி ஏமாற வேண்டாம்” என கூறி, மோகன்ராஜின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் இழிவான பதிவுகளை பரப்பியுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மோகன்ராஜ், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, அவர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
ஆனால், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், நாட்றம்பள்ளி காவல் நிலையம் முன்பு தன் தலை மீது டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அப்போது அங்கு இருந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜிடம் இருந்த டீசல் கேனை பிடுங்கி வீசி, தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினர்.
மேலும், புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து அவரை காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால், நாட்றம்பள்ளி காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

