Skip to content

அபுதாபி கார் விபத்து: கேரளாவைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி

துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது 4 மகன்கள் மற்றும் வீட்டுப் பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் தனது மனைவி ருக்சானா மற்றும் 5 குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையைக் கழிப்பதற்காக, அப்துல் தனது குடும்பத்தினருடன் அபுதாபிக்குச் சென்றுள்ளார்.

அபுதாபியில் இருந்து மீண்டும் துபாய்க்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அப்துலின் மகன்களான அஷாஸ் (14), அம்மார் (12), அஸாம் (7), அயாஷ் (5) ஆகிய நான்கு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த கேரளாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர் புஷ்ரா (49) என்பவரும் உயிரிழந்தார்.

படுகாயமடைந்த அப்துல் லத்தீப், அவரது மனைவி ருக்சானா மற்றும் அவர்களது பெண் குழந்தை ஆகிய மூவரும் மீட்கப்பட்டு, அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆண் குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவம் கேரளா மற்றும் துபாயில் உள்ள இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!