Skip to content
Home » விமானத்தில் யார் தவறாக நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்…ஏர் இண்டியா உத்தரவு

விமானத்தில் யார் தவறாக நடந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்…ஏர் இண்டியா உத்தரவு

கடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், ஒரு ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ஏர் இந்தியா நேற்று விளக்கம் அளித்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சம்பவத்தன்று, ‘பிசினஸ்’ வகுப்பில் பயணம் செய்த ஒரு பெண் பயணி, தன் அருகே உட்கார்ந்துள்ள ஆண் பயணி, தன் மீது சிறுநீர் கழித்து விட்டதாகவும், தனது உடைகளும், பையும் நனைந்து விட்டதாகவும் விமான சிப்பந்திகளிடம் புகார் தெரிவித்தார்.

விமானம் கீழே இறங்கியவுடன், ஆண் பயணி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். அவருக்கு அதே வகுப்பில் வேறு இருக்கை அளிக்கப்பட்டது. மாற்று உடையும், செருப்பும் வழங்கப்பட்டது. சற்று நேரம் கழித்து, ஆண் பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக் கொண்டார். அவர்கள் இருவரும் சமாதானமாக சென்று விட்டதுபோல் தோன்றியது. அதனால்தான் போலீசில் நாங்கள் புகார் செய்யவில்லை. இருப்பினும், உள்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல் விசாரணை முடிந்தது. 10-ந் தேதி, 2-ம்கட்ட விசாரணை நடக்கிறது. மேலும், விமானத்தின் பயண அறிக்கையில் இச்சம்பவம் பதிவிடப்பட்டது. ஆண் பயணி, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். அவர் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண் பயணிக்கு விமான கட்டணம் திருப்பித் தரப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், விமானத்தில் யாராக இருந்தாலும் முறைகேடாக நடந்து கொண்டால் உடனடியாக அதிகாரிகளிடம் இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது என்று ஏர் இந்தியா சிஇஓ கேம்பெல் வில்சன் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!