மகாராஷ்டிராவில் மும்பை உட்பட பல மாநகராட்சிகளுக்கான தேர்தல் நாளை (ஜனவரி 15) நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தலைவர்களின் முக்கிய கூட்டம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகம் அருகே நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும், கூட்டணியில் இடம்பெறுபவர்கள் யார் என்பது அப்போது தெரியவரும் என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தை முன்னிட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்களுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் படமும் இடம்பெற்றுள்ளது. இது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்னும் கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது உறுதி என்று பலரும் ஊகித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தினகரன் தலைமறைவாகிவிட்டார் என்றும், தயக்கத்தால் வீட்டிலேயே இருக்கிறார் என்றும், சோர்ந்து போய்விட்டார் என்றும் எனக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மனதில் எந்த குறையும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், “எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் கூட்டணிக்குச் செல்வதை உரியவர்கள் அறிவிப்பார்கள். அதன்பிறகு உங்களுக்கு கூட்டணி குறித்து தெரியவரும். நான் ஒரு கூட்டணியில் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்குபவர்கள் கூட்டணி குறித்து அறிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த பதில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.தற்போதைய அரசியல் சூழலில் டிடிவி தினகரனின் இந்த பேச்சு, அமமுகவின் அடுத்த நகர்வு குறித்து பல்வேறு ஊகங்களைத் தூண்டியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ கூட்டத்திற்கு முன்பாகவே கூட்டணி அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தக் கூட்டணி முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

