Skip to content
Home » எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கூட்டணியில் இருந்து கொண்டே இவ்வாறு பேசியது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனாலும் அண்ணாமலை, ஜெயலலிதா பற்றி பேசிய பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி தொடர்பாக டில்லி மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் கூட்டணி தொடர்பாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். இந்த சமயத்தில் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை மிரட்டல் விடுத்தார்.  மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தான்  அண்ணாமலையை டில்லிக்கு வரவழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அண்ணாமலையிடம் அதிமுகவுடன் தான் பாஜ கூட்டணி என தெளிவாக கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.. அதன் பிறகு அண்ணாமலை அதிமுக குறித்து எந்த வித சர்ச்சை கருத்தையும் கூறுவதில்லை. இந்நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை, இன்று (28ம் தேதி) முதல் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குகிறார். இந்த பயணத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இந்த நடைபயணம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியை சுற்றி சுமார் 100 நாட்கள் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை இன்று நடைபயணத்தை தொடங்குவதையொட்டி ராமேஸ்வரத்தில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜ நடத்தும் நடைபயணத்தில் பங்கேற்குமாறு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கடந்த 24ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்தார். முறைப்படி கட்சி அலுவலகத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாஜ கூட்டணியில் உள்ள பெரிய கட்சி அதிமுக என்ற வகையிலும், ஒன்றிய உள்துறை அமைச்சரும், பாஜவில் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கும் அமித்ஷா வர உள்ளதால் எடப்பாடிக்கும் அழைப்பு விடுத்தாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை பாஜ சார்பில் அண்ணாமலை தொடங்கும் நடைபயணத்தில் எடப்பாடி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவை அழைத்த அதே சமயம் ரகசியமாக ஓபிஎஸ்சையும் அண்ணாமலை அழைத்து இருப்பதாகவும் விழாவிற்கு வருவதாக ஓபிஎஸ் கூறியிருப்பதாகவும் இந்த தகவல்கள் தெரிந்ததால் தான் எடப்பாடி புறக்கணிப்பு முடிவை எடுத்தாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இது குறித்து மதுரை ஏர்போர்ட்டில் பாஜ தலைவர் அண்ணாமலையிடம் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? என நிருபர்கள் கேட்டனர்.. தமிழகத்தின்  நலனில் அக்கறை கொண்ட யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம் என மழுப்பலாக பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!