Skip to content

ஸ்பெயின் நாட்டுப் பெண்ணுக்குக் கொலை முயற்சி: காதலை மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல்

மைசூருவில் யோகா பயின்று வரும் ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவரை, காதலை மறுத்த காரணத்திற்காக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா சபாடீ ஹொலியூ (28), கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் யோகா பயில்வதற்காக மைசூரு வந்தார். லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி யோகா பயிற்சி பெற்று வரும் இவருக்கு, சக யோகா மாணவரான ராகுல் தத்தா என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் தத்தா மரியாவைக் காதலிப்பதாகக் கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், மரியா அவரது காதலை ஏற்க மறுத்ததோடு, தனக்கு ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் காதலன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ராகுல் கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மரியா கிருஷ்ணராஜா புலே வார்டு சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ராகுல், திடீரென மரியாவின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதித் தள்ளினார்.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட மரியா, படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்த பொது மக்கள் மரியாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து லட்சுமிபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராகுலைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராகுலைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!