Skip to content
Home » வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அசீம் அனார் (56), மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ம் தேதி  கொல்கத்தா வந்தார். பாராநகர் பகுதியில் உள்ள தனது நண்பரான கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த அவர், மறுநாள் மருத்துவரை சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதுதொடர்பாக பாராநகர் காவல் நிலையத்தில் கோபால் பிஸ்வாஸ் கடந்த மே 18-ம் தேதி புகார் அளித்தார்.

இந்த நிலையில்  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்   வங்கதேச எம்.பி. அசீம் படுகொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு நேற்று  தெரிவித்தது. இதுவரை அவரது உடல் கைப்பற்றப்படவில்லை.

முன்னதாக, அவர் காணாமல் போன அன்று, அன்வருல் செல்போனிலிருந்து, அவரது மகளுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் தான் டில்லி வந்திருப்பதாகவும், இரண்டு நாளில் மேற்குவங்கம் திரும்புவேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் அவரது மகள் போனில் அழைத்தபோது அன்வருல் பேசவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தின் வழக்கு விசாரணை மேற்கு வங்க காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அன்வருல் கொலை செய்யப்பட்டதற்கான நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது என்று மாநில சிஐடி ஐ.ஜி. அகிலேஷ் சதுர்வேதி தெரிவித்தார்.இந்திய – வங்கதேச காவல்துறை இணைந்து, கொலையாளிகளைப் பிடிக்கவும், அன்வருல் உடலைக் கைப்பற்றவும் தீவிரமாக பணியாற்றிவருகிறார்கள்.

இந்தச் சூழலில், வங்கதேச தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களுக்கு  நேற்று பேட்டியளித்த அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அசாத் உஸ்மான் கான், எம்.பி. அன்வருல் கொலையான தகவலை வெளியிட்டார்.
அவர்  கூறுகையில், ‘கொல்கத்தாவில் கொடூரமான முறையில் அன்வருல் கொலை செய்யப்பட்டுள்ளார். இது திட்டமிட்ட கொலையாகும். இதுதொடர்பாக, டாக்காவில் 3 பேரை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலையாளிகள் அனைவரும் வங்கதேசத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இரு நாட்டு காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கான நோக்கம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.

இதனிடையே, கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. அன்வருல் கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்த மாநில சிஐடி போலீஸ், அவரது உடல் இன்னும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தது.
இது தொடர்பாக சிஐடி ஐ.ஜி. அகிலேஷ சதுர்வேதி கூறுகையில், ‘எம்.பி. அன்வருல் வருகை குறித்து மாநில காவல் துறைக்கு முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. காவல் துறையில் புகார் பதிவான பிறகே அவரது வருகை குறித்து தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து கடந்த 20-ம் தேதி ஒரு தகவல் வந்தது. அதன் பின்னர், அவர் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் புதன்கிழமை மற்றொரு தகவல் கிடைக்கப் பெற்றது. கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படும் நியூ டவுன்  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அ ந்த குடியிருப்பு, மாநில கலால் துறை ஊழியர் ஒருவருக்கு சொந்தமானது’ என்றார்.

இந்த வீட்டை அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சோதனை நடத்தியதில் ரத்தக்கறை இருந்துள்ளது. ஆனால் உடல் கிடைக்கவில்லை. அந்த குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில், மே 13ம் தேதி அன்வருல் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் வீட்டுக்குள் வருவது பதிவாகியிருக்கிறது. ஆனால் அவர் திரும்பச் சென்றது பதிவாகவில்லை. மே 13 முதல் 15ம் தேதிக்குள் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களும் வெவ்வேறு நேரத்தில் வெளியேறியிருக்கிறார்கள்.
அந்த இரு ஆண்களும் மிகக் கனமான ஒரு பெரிய பையை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எனவே, கொலை செய்யப்பட்ட அன்வருல் உடலை அவர்கள் துண்டு துண்டாக வெட்டி  பையில் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எம்.பி.யுடன் வந்த மூவரில் இருவர் வங்கதேசத்துக்கு தப்பிவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!