தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கீழ திருவிழாபட்டி வீரமாகாளி நகர் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் சாம் ஜெபசீலன் (25). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் செயின், 2 கிராம் மோதிரம் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெபசீலன் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செங்கிப்பட்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த போதே துணிச்சலாக மர்மநபர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டிருந்தது செங்கிப்பட்டி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
