Skip to content

பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். வழியில் சேலத்தில் இருந்து வந்த மற்றொரு குழுவினருடன் இணைந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சாலைத் தடுப்பில் மோதி நின்றது. இந்த விபத்தில் மலர்க்கொடி (35), சசிகலா (47), விஜயலட்சுமி (40) ஆகிய 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த ஜோதிலட்சுமி (57) மற்றும் சித்ரா (40) ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சித்ரா உயிரிழந்தார். ஜோதிலட்சுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான நான்கு பெண்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காகப் போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை திரிசூலத்தைச் சேர்ந்த கவுதம் (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!