நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அந்த அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத் ஆர்எஸ்எஸ்-ன் அடுத்தக்கட்ட திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள், ஆதரவாளர்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சென்னையில் இருந்து ரெயில் மூலம் திருச்சிக்கு இன்று வந்தடைந்தார். திருச்சி ரெயில் நிலையத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், இந்து அமைப்பினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து உறையூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றடைந்தார். அங்கு தமிழக அளவிலான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்து

கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு திருச்சி மாவட்டம் சமயபுரம் எமரால்டு மஹாலில் நடைபெறும் நிகழ்வில், தமிழக அளவிலான பிரபலங்கள், கல்வியாளர்கள், சாதி மதத் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
பின்பு இன்று இரவு ஆர்எஸ்எஸ் அலுவலகமான சாதனா இல்லத்தில் தங்கும் மோகன் பகவத், நாளை (11 ந்தேதி) காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.
மேலும், மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் கோடு கொண்ட அழைப்பிதழ்கள், ஐடி கார்டுகள் வழங்க பட்டுள்ளன. இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதியில்லை. மேலும் இசட் பிளஸ் என்ற உச்சபட்ச பாதுகாப்பு பிரிவில் இருக்கும் மோகன் பகவத் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

