Skip to content
Home » மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

மீண்டும் பாஜக ஆட்சி.. சட்டா பஜாரில் 7 லட்சம் கோடிக்கு சூதாட்டம்..

ராஜஸ்தானின் பலோடி நகரில் கடந்த 1952-ம் ஆண்டில் ‘சட்டா பஜார்’ என்ற சூதாட்ட அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் சூதாட்ட அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின் போது’சட்டா பஜார்’ சூதாட்ட அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்துகின்றன. இந்த முறையும் மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானின் பலோடி, மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் பாலன்பூர், சூரத், கர்னால், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, மத்திய பிரதேசத்தின் இந்தூர், கர்நாடகாவின் பெலகாவிஉள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த ‘சட்டா பஜார்’ சூதாட்ட அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளன. ஒரு மக்களவைத் தொகுதியில் சுமார் 40 முகவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தி ராஜஸ்தானின் பலோடி நகரில் உள்ள தலைமைசூதாட்ட அமைப்புக்கு புள்ளிவிவரங்களை அளித்துள்ளனர். ஒட்டுமொத்த ‘சட்டா பஜார்’ சூதாட்டஅமைப்புகளின் புள்ளிவிவரங்களின்படி பாஜக தனித்து 303 தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 64 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணித்துள்ளன.  இவற்றை மையமாக வைத்து பல்வேறு நகரங்களில் சுமார் ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.7 லட்சம் கோடி வரை சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ‘சட்டா பஜார்’ சூதாட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது.. முன்னணி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 415 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால். பாஜக 303, காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நாங்கள் கணித்துள்ளோம். தமிழ்நாட்டில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளோம். பாஜக 250 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று ஒருவர் பந்தயம் கட்டினால் 12 பைசாவை கட்டணமாக நிர்ணயித்து உள்ளோம். பாஜக 275 தொகுதிகளை வென்றால் 27பைசா, 301 தொகுதிகளை வென்றால் ஒரு ரூபாய், 310 தொகுதிகளை வென்றால் 1.65 ரூபாய், 325 தொகுதிகளை வென்றால் 3.50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோல காங்கிரஸ் 50 தொகுதிகளை வென்றால் 33 பைசா,60 தொகுதிகளை வென்றால் 1.15 ரூபாய், அதற்கு மேற்பட்ட தொகுதிகளை வென்றால் 1.40ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக ஒரு நபர் ரூ.1 லட்சம் முதல் ரூ4 கோடி வரை பணம் செலுத்தி பந்தயம் கட்டுகின்றனர். ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கான தொகையை நேர்மையாக விநியோகிப்போம். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயர்களிலும் சூதாட்டத்தை நடத்துகிறோம். அதற்கு பெரும்தொகை கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளது என்கின்றனர் ‘சட்டா பஜார்’ சூதாட்ட நிர்வாகிகள் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!