Skip to content

மெக்காவில் சிக்கிய தலைமை காஜி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் நலம் விசாரிப்பு

சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வருகிறது. கத்தாரில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

எரிசக்தி தொடர்புடைய கட்டமைப்புகள் மீது ஈரான் 2 ஏவுகணைகள் வீசியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஸ் லஃப்பான் நகரில் உள்ள மெசையித் மின் நிலையம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஓமனில் வெடி மருந்து நிரப்பப்பட்ட படகை எண்ணெய் கப்பல் மீது மோதவிட்டு வெடிக்கச் செய்ததில் ஒருவர் உயிரிழந்தனர். ஓமன் அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் மீது படகை மோதச் செய்து வெடிக்கச் செய்த நிலையில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஓமன் கடலோரத்தை ஒட்டி செல்லக் கூடிய கப்பல்கள் தாக்கப்பட வாய்ப்பு என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால் இஸ்ரேலில் பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவுகிறது. டெல் அவிவ் நகர், ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சைரன் ஒலி எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. ஈரானின் நதான்ஸ் நகரில் உள்ள அணுசக்தி கட்டமைப்பு மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அணுசக்தி கட்டமைப்பு மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை ஈரான் உறுதி செய்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

தாக்குதலில் நெதன்யாகுவின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை. இஸ்ரேல் விமானப் படை தளபதி அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். போர் சூழலால் மெக்காவில் சிக்கியுள்ள அவரை, பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

error: Content is protected !!