மக்கள் தொகை என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது சீனா. அந்த நாட்டின் மக்கள் தொகை தற்போது 140 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் சீனா பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளதால், 140 கோடி ஜனத்தொகை சீனாவுக்கு பெரிய பாரமாக தெரியவில்லை. ஒருகாலத்தில் சீனா பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தபோது மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல திட்டங்களை அமல்படுத்தியது. ஒருகுழந்தை போதும் என அரசு கூறியது. குடும்ப கட்டுப்பாட்டை ஊக்குவித்தது. இதன் பலனாக அங்குஇப்போது பெரும்பாலான தம்பதிகள் ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
இதுபற்றி சீனா ஆய்வு நடத்தியது. குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்டால் அதிக செல்வு ஏற்படுகிறது. எனவே குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதாக சீன தம்பதிகள் கூறினர். இப்படியே போனால் சீனாவின் மக்கள் தொகை விரைவில் குறைந்து விடும். முதியவர்கள் எண்ணிக்கை பெருகிவிடும். இப்போது இந்தியா அதிக மக்கள் கொண்ட நாடாக உருவாகி விட்டது. எனவே இளம் தம்பதிகள் அதிக குழந்தை பெற்றுக்கொள்ள பல திட்டங்களை சீன அரசு ஆலோசித்தது. அதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு வருடம் ரூ-50 ஆயிரம் வீதம் 3 வருடத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய திட்டம் ஒன்றை சீனா அறிவித்துள்ளது. இதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 50 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதாவது ஒரு குழந்தைக்கு ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.