சென்னையில் நாய்களை கடத்தி உரிமையாளர்களிடம் இருந்து பணம் பறிக்கும் தொழிலை செய்து வருகிறார் நாய் சேகர் (வடிவேலு). இவரின் கேங்கில் ரெடின் கிங்க்ஸ்லி, பிரசாந்த், ஷிவாங்கி ஆகியோர் இருக்கின்றனர். ஒருமுறை தவறுதலாக சென்னையில் இருக்கும் பிரபல தாதாவான தாஸ் (ஆனந்த்ராஜின்) நாயை வடிவேலு கடத்தி விட பிரச்சினை ஆரம்பமாகிறது. இந்த சண்டையில் ஆனந்த்ராஜை தவறுதலாக துப்பாக்கியால் சுட்டு விடுகிறார் வடிவேலு. இந்தப் பிரச்சினையால் வடிவேலு பதற்றமடைய இந்த தொழிலை விட்டுவிடும்படி அவரது பாட்டி சச்சு அறிவுரை சொல்லி ஒரு ஃப்ளாஷ்பேக் கதையும் சொல்கிறார். அவரது மகனுக்கு குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு போகும்போது அங்கு ஒரு அதிர்ஷ்ட நாயை கொடுக்கிறார் சித்தர் ஒருவர். அதற்கு பிறகு குழந்தை, செல்வம் என பெருவாழ்வு கிட்டுகிறது. உண்மை தெரிந்து அந்த பைரவர் நாயை பாதுகாக்கும் மேகநாதன் அதைக் கொண்டு சென்று விட, வடிவேலு குடும்பம் செல்வம் இழந்து சென்னைக்கு குடிபெயர்கிறது. இப்போது அந்த நாய் ஹைதராபாத்தில் இருக்கிறது எனவும் அதைத் தேடிக் கொண்டு வரும்படியும் அவரது பாட்டி வடிவேலுவிடம் சொல்ல, வடிவேலு அந்த நாயை மீட்டாரா ஆனந்த்ராஜூக்கும் அவருக்கும் உள்ள பிரச்சினை தீர்ந்ததா என்பதுதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை. பல வருடங்களுக்குப் பிறகு திரையில் வடிவேலு. தனது தேர்ந்த நடிப்பின் மூலமும் முக பாவனைகள் மூலம் ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் வடிவேலு. இருப்பினும் நாய் சேகர் ரிட்டன்ஸ் பெரிய அளவில் குரைக்கவில்லை…….
