Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால்….. 29 நாளில் 30 பேர் உடல் உறுப்புகள் தானம்….

விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அத்துடன் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில நேரங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு

ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில், 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி 2024 ஜனவரி 1 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2008- ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48 பேர், கல்லீரல் 27 பேர், இதயம் 10 பேர், நுரையீரல் 13 பேர் என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என்று கூறியுள்ளது. இந்த உடல் உறுப்புகளால் பலர் பயன் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!