தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழ் நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் 23ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை அவர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில்முதலீடுகளை செய்ய அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சிகாகோ விமான நிலையத்தில் இருந்து முதல்வர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னைக்கு புறப்பட்டுள்ளார். சென்னை புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழியனுப்பி வைத்தனர். முதல்வரின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிகாகோ விமானநிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் திமுக கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி வழியனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவில் இருந்து புறப்படும்போது முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களும், தொழில் அதிபர்களும், அதிகாரிகளும் அளித்த மிகுந்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். நாளை சென்னை வரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திமுக ஏற்பாடு செய்துள்ளது.