நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப்பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளார்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2538 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டின் பொருளாதார ளர்ச்சி இன்று 11.19 சதவீதத்தை எட்டி உள்ளது. அதாவது இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. இது தான் இன்று டாக் ஆப் த சிட்டியாக இருக்கிறது. டாக் ஆப் த சிட்டி என்பதை தாண்டி இது தான் டாக் ஆப் த நேஷன்(talk of the nation) ஆக உள்ளது. திமுக ஆட்சி வரும்போதெல்லாம் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். 14 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி உள்ளது. இது இந்தியாவில் மாபெரும் வளர்சசி. இது சாதாரணமாக நடக்கவில்லை. நெருக்கடி, அவதூறுகளுக்கு மத்தியில் இந்த சாதனையை பெற்றோம். இது தனிப்பட்ட ஸ்டாலினின் வளர்ச்சி இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதை தமிழ்நாட்டு மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
இந்த வெற்றி செய்தியை, மகத்தான வெற்றி, நற்சான்று பத்திரம். திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் தேர்வாணையம் மூலம் 1.82 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளோம். நான் முதல்வன் திட்டம் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வழங்கி உள்ளோம். இந்த வெற்றி பயணம் தொடர அனைவரும் பாடுபடுவோம்.
தமிழ்நாட்டுக்காக நாம் இன்னும் அதிகமாக பயணிக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும். அடுத்து வர உள்ள நமது ஆட்சியான 2.0வில் இன்னும் பல புதிய திட்டங்களை அறிவிக்க இருக்கிறேன். அப்போது ஏராளமானதிட்டங்கள் வரப்போகிறது. பணியாணை பெற்ற நீங்கள், உங்கள் பெற்றோரிடமும், மக்களிடமும், அரசிடமும், நல்ல பெயர் எடுக்க பாடுபடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.