Skip to content

6 பேருக்கு பதவி முடிகிறது- மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6 எம்பிக்களின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது. இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கக் கூடும். இதில் யார் யாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்க உள்ளது. ராஜ்ய சபா தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாரின் பதவிக்காலம் நிறைவு? இதன்படி தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், ஜிகே வாசன், தம்பிதுரை ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மாநிலங்களவை தேர்தல் வந்திருப்பது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் புதிய சவாலை கொடுத்துள்ளது. திமுக, அதிமுகவுக்கு எவ்வளவு? ஏனென்றால் தற்போதைய சூழலில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கக் கூடும். இதனால் சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணியை பேசும் கட்சிகள் தரப்பில் சிலர் ராஜ்ய சபா எம்பியை கேட்கக் கூடும். ஏற்கனவே மதிமுக தரப்பில் வைகோவுக்கு ராஜ்ய சபா கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

திமுகவில் என்ஆர் இளங்கோவுக்கு உறுதி … அதேபோல் விசிகவுக்கு குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கும் பட்சத்தில், அவர்களும் ராஜ்ய சபா எம்பிக்கு சில அழுத்தம் கொடுக்கலாம். இதனிடையே திமுக தரப்பில் பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் என்ஆர் இளங்கோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதி. அதேபோல் ராஜ்ய சபாவில் சீனியரான திருச்சி சிவாவிற்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

புதிய பெண் முகம்? இதனால் மீதமுள்ள 2 ராஜ்ய சபா சீட்கள் யார் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தியூர் செல்வராஜ் மற்றும் கனிமொழி சோமு ஆகியோரின் இடங்களுக்கு புதியவர்கள் கொண்டு வரப்படலாம் என்று கருதப்படுகிறது. கனிமொழி சோமுவுக்கு பதிலாக வேறொரு பெண் முகத்தை திமுக ராஜ்ய சபாவுக்கு அனுப்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு நெருக்கடி அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே பாமகவுக்கு ஒரு சீட் கொடுப்பதாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அன்புமணிக்கு தேர்தலுக்கு முன்பே கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி கொடுக்கப்பட்டதால், அது பிரேமலதாவுக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முடிவு என்ன? ராஜ்ய சபாவின் 2 இடங்களும் அதிமுகவினருக்கு இல்லையென்றால், அது மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கட்சிக்குள் ஏற்படுத்தும். இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளுமே ராஜ்ய சபா சீட்டை தீவிரமாக எதிர்பார்த்திருக்கின்றனர்.

error: Content is protected !!