சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசாவில் இந்த வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கரோனா மேலாண்மைக்கான வழிகாட்டுதல்படி, குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், உள் அரங்குகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி, மருத்துவர்கள் ஆலோசனை பெற்று, கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை துறை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.