பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி உறையூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குணா (38). பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (17-ம் தேதி) இரவு வேலை முடிந்து தனது காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணி அளவில் பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவில் கார் சென்றபோது, சாலையில் நடந்து சென்ற நெய்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவர் மீது கார் பலமாக மோதியது.
கிருஷ்ணமூர்த்தி மீது மோதிய வேகம் குறையாமல், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர டீக்கடையின் முன்பகுதியை உடைத்துக் கொண்டு, அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் கார் கிணற்றுக்குள் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.
சாலையில் சடலமாகக் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்ட போலீஸார், அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் இறந்ததாகக் கருதினர். ஆனால் இன்று காலை, டீக்கடை உடைந்திருப்பதையும், கிணற்றில் ஆயில் மிதப்பதையும் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் கிரேன் மற்றும் மின் மோட்டார்கள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கியிருந்த காரை மீட்டனர். காரின் உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் இருந்த குணாவின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தக் கோர விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, தேசிய நெடுஞ்சாலை ஓரம் பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கும் கிணறுகளுக்கு உடனடியாகத் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என மாவட்ட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

