அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது என செயல் பட்டு வருகிறார். இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிமையியல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் செய்கையால் தொண்டர்களிடையே குழப்பம் விளைவிக்கும் நோக்கம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதிமுகவின் கட்சியின் பெயரையோ இரட்டை இலை சின்னத்தையோ கட்சியின் கொடியை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அதிமுகவின் கொடி சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதிமுக கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.