Skip to content

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (60). விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் சக்திவேல் நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

குளிக்கச்சென்றவரை காணவில்லையே என அவரது குடும்பத்தினர் தேடி வந்து பார்த்தபோது சக்திவேல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. உடன் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு படை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாலுகா போலீசார் மற்றும் தஞ்சை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் இறங்கி சக்திவேலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 18ம் தேதி துறையூர் அருகே அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றின் கரையோரம் முதியவர் பிணம் ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாலுகா போலீசாருடன் சக்திவேலின் உறவினர் சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து சக்திவேல் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து சக்திவேலின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!